Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : பௌராவின் பிறப்புக் கோட்பாடும் தமிழ்க்கதைப்பாடல் தலைவர்களின் பிறப்பும்
Author(s) : முனைவர் ந.சோழன்
Article Information : Volume 1 - Issue 1 (May - 2017) , 60 - 65

Abstract :

மனிதன் எப்போதும் எதிலும் பிறரைக் காட்டிலும் சிறந்தவனவாக விளங்க வேண்டும் என்ற வேட்கையினை உடையவன். இவ்வேட்கையின் விளைபொருளாகவே மனிதனை உயர்த்திப் பாடும் இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. தொடக்க காலத்தில் மனிதனைப் பிறரிடமிருந்து சிறப்பித்துக் காட்டும் பண்புகளில் தலைசிறந்து விளங்கியது வீரமே. இக்கருத்தினைத் தொடக்க கால இலக்கியங்கள் அனைத்தும் விளக்கி நிற்கின்றன. இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்த சி.எம்.பௌரா ஐரோப்பா,ஆசியா,ஆப்பிரிக்கக் கண்டங்களிலுள்ள சுமார் 30 நாடுகளின் வீரநிலை இலக்கியங்களை ஆய்விற்கு எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார். அவ் ஆய்வின் விளைவினைத் தனது வீரநிலைக் கவிதை (Heroic Poetry) என்ற நூலில் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கியுள்ளார். எந்தவொரு இலக்கியத்திற்கும் தொடக்கம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. வீரநிலை இலக்கியத்தில் கதைத் தலைவர்களின் பிறப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கதைத் தலைவர்கள் பெரும்பாலும் கடவுள் அருளால் பிறந்தவர்களாகவோ தேவதைக்குப் பிறந்தவர்களாகவோ உள்ளமையை எடுத்துக்காட்டி, இதற்குக் காரணமாகக் கதைத் தலைவர்களின் புகழினைத் தொடக்கத்திலேயே எடுத்துக்காட்டுவதற்கும் அவர்கள் பிறரை விட வீரத்தில் மேம்பட்டவர்கள் என்பதை உணர்த்துவதற்குமே இவ்வுத்தி பயன்படுத்தப்படுகின்றது எனக் கூறியுள்ளார்1. இதுவே அவரின் பிறப்பு குறித்த கோட்பாடாகும். பொதுவாகத் தமிழ்க் கதைப்பாடல்கள் கதைத் தலைவனின் பிறப்பிலிருந்து தொடங்கி அவனின் இறப்பு வரையிலான நிகழ்வுகளையோ அல்லது தலைவனின் வெற்றி, தோல்விகளையோ பேசிச் செல்கின்றது. அந்த வகையில் தமிழ்க் கதைப்பாடல்களான அண்ணன்மார்சுவாமி கதை, சேர்வைக்காரன் கதை, தோட்டுக்காரி கதை, ஈனமுத்துப்பாண்டியன் கதை, சின்னணைஞ்சான் கதை ஆகியவற்றுள் இடம்பெற்றுள்ள கதைத் தலைவர்களின் பிறப்பினைப் பௌராவின் பிறப்புக் கோட்பாட்டு அடிப்படையில் இக்கட்டுரை ஆய்கின்றது.


Keywords :
Document Type : Research Paper
Publication date : May 05, 2017